Sunday, July 27, 2008

மன்னார் சொன்ன யோசனை


2007ஆம் ஆண்டு சென்னை ஒரகடத்தில் வங்கிக் கடன் மூலம் ஒரு நிலம் வாங்கினேன். பல மாதங்களாகப் பூட்டிக் கிடந்ததால், அங்கு முழங்கால் உயரத்திற்குப் புற்களும் புதர்களுமாக மண்டிக் கிடந்தன. அவற்றை அகற்றினால்தான் அங்கு எந்தக் கட்டுமானப் பணியையும் செய்ய முடியும் என்ற நிலை. அவற்றை அகற்றுவதற்காகக் கூலி ஆட்களிடம் பேசினேன். இரண்டாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்கள். இந்த வேலைக்கு இந்தத் தொகை அதிகம் என்பது என் எண்ணம்.

ஆகவே என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது, அந்த நிலத்திற்கு 'ரஃப் யூஸ்' எனப்படும் கட்டட இடிபாடுகளைத் தன் மாட்டு வண்டியில் கொண்டு வந்து கொட்ட வந்த மன்னார் ஒரு வழி சொன்னார்.

அதாவது நிலத்தினைச் சில நாள்கள் பூட்டாமல் திறந்து வைத்தால் அண்டை அயலில் உள்ள மாடுகள் உள்ளே நுழைந்து புற்களை மேய்ந்து விடும் என்றார். நல்ல யோசனையாகப் பட்டது. நமக்கும் செலவு மிச்சம்; மாட்டுக்கும் உணவு என இரட்டைப் பயன் இருக்கிறதே என்ற எண்ணத்தில் நிலத்தினைத் திறந்து வைத்தேன்.

பக்கத்தில் எனக்குத் தெரிந்த மாடு வளர்ப்பவர்களிடமும் சொன்னேன். அவர்கள், தங்கள் மாடுகளைத் தினமும் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு, மாலையில் பிடித்துக் கட்டுவது வழக்கம். உங்கள் மாடுகளைச் சில நாள்கள் இந்த நிலத்தில் விடுங்கள்; இதனால் உங்களுக்கு நன்மை என்றேன். அப்போது சரி என்றவர், அங்கு பூச்சி பொட்டுகள் இருக்கும் என எண்ணி, தன் மாடுகளை அங்கு ஓட்டி விடவில்லை.

ஒன்றிரண்டு மாடுகள் மட்டுமே மேய்ந்தன. அவையும் முழுமையாக மேயவில்லை. கடைசியில் ரூ. 350 செலவில் இரண்டு ஆட்கள் ஒரே நாளில் அந்த நிலத்தை ஓரளவு சீர் செய்தார்கள்.

எனது இந்த முயற்சி பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் மன்னார் சொன்ன யோசனை, நல்ல பயன் உடையதுதான். நாளை உங்களுள் யாருக்காவது இப்படியொரு தேவை ஏற்பட்டால் மாடுகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.